அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ந்தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளில் அ.தி.மு.க. தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரையும் போட்டியிட விடாமல் தடுத்துள்ளனர். எனவே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வக்கீல்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர். மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடினார். அவரது வாதம் வருமாறு:-
வேட்புமனுதாக்கல் நிறைவு என இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வு என அறிவிக்கப்படலாம். ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என கூறி விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது. தலைமை கழக நிர்வாகியாக அல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாதபடி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு ஞாயிற்றுக்கிழமை மனுதாக்கல் முடிவு என்று அவசரம் காட்டியுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அவசர அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? ஓரிரு நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவிடுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலராளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
வைத்தியலிங்கம் சார்பில் மூத்த வக்கீல் மணிசங்கர் வாதாடியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம். அதற்குள் பொதுக்குழு வழக்கை விசாரிக்கலாம். நாளை வந்து ஒரே ஒரு வேட்பு மனுதான் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி வெற்றி என்று சொல்வார்கள். பொதுச்செயலாளர் தேர்தலில் வேறு யாரையும் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். இவ்வாறு அவர் வாதாடினார்.
ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் வாதாடியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீசு கொடுக்காமல் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் நடத்துவது தவறு. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டப்படி உள்ளது. அதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் அறிவிப்பு உயர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவது ஆகும். இவ்வாறு அவர் வாதாடினார்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியலிங்கம் வாதாடியதாவது:-
1.65 கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 1.65 கோடி தொண்டர்களின் ஆதரவை பெறவில்லை. அவர்களது ஆதரவும் இவர்களுக்கு இல்லை. கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. அதில் அநீதி இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தொடரலாம். பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த 3 பேரும் கோர்ட்டுக்கு முதலில் போகவில்லை. கட்சி உரிமையை இழந்தவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. கோர்ட்டுகள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்தபோது தேர்தல் நடத்தப்படாது என்று உத்தரவாதம் அளித்தோம். சுப்ரீம் கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு பெறப்படுவது பழைய நடைமுறைதான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு வாக்கு மையங்களில் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர் அட்டையும் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. முறைப்படி தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தால் கண்டிப்பாக தேர்தல் நடத்தப்படும். ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே நடைமுறைதான் இருந்தது. தேர்தல் அறிவிப்பு வழக்கமான நடைமுறை தான். வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யவில்லை. ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை காரணம் கூறி இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதாக மனுதாரர்கள் கூற முடியாது. வழக்கு தொடர அவர்களுக்கு உரிமை இல்லை. இந்த கட்சியின் அஸ்திவாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனவே எங்களை வெளியேற்றிவிட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மனுதாரர் கூறுவதே தவறு. அவர்கள் இது போன்ற வழக்குகளை தொடுத்து கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்கின்றனர். கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. 23.6.2022 மற்றும் 11.7.2022 ஆகிய தேதிகளில் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இவர்கள் வழக்கு தொடர முடியாது. அவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதா என நிரூபிக்க சொல்லுங்கள். ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் 2600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 2100-க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.50 கோடி அடிப்படை உறுப்பினர்களின் விருப்பப்படி ஒற்றை தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுக்குழுதான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு. ஒற்றை தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் ஓ.பி.எஸ். ஆதரவு மனுதாரர்களுக்கு கட்சியில் ஆதரவில்லை. எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்களின் விருப்பத்தின்படி போட்டியிடுகிறார்.
அசாதாரண சூழலில் கட்சியின் எதிர்காலத்தை கருதுகிறோம். தனிப்பட்ட நபர்களின் பாதிப்பை அல்ல. கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுகளின்படி பார்க்கும்போது ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். தற்போதைய நிலை என்ன என்பதையும், கட்சியின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்துமாறு கூறிய ஓ.பி.எஸ். தரப்பு தற்போது தடைகோருவது ஏன்? ஓ.பி.எஸ். இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. 3 பேருமே மறைமுக மனுதாரர்களாக உள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை. கட்சியில் ஓ.பி.எஸ்.சுக்கு 1 சதவீத உறுப்பினர்கள்கூட ஆதரவாக இல்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே உறுப்பினர் பதவி உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. தேர்தல் தொடங்கி விட்டால் அதில் தலையிட முடியாது என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார்.
பின்னர் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் விஜய நாராயணன் வாதாடியதாவது:-
பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு 4 முறை ஐகோர்ட்டு தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன் பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. 2017-ம் ஆண்டிலும் இதே போன்ற நிலை நிலவியது. அப்போதும் பலர் வழக்கு போட்டனர். பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. 23.6.2022 பொதுக்குழு கூட்டத்துக்கு இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் 11.7.2022 பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. கட்சியின் உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் உள்ள ஒப்பந்தம் கட்சியின் விதிகளாகும். அந்த விதிகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை 1.50 கோடி தொண்டர்கள் உருவாக்கினர். அதை மீற முடியாது என்று கூற முடியாது. பொதுக்குழு சர்வ அதிகாரமும் கொண்டது. கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சூழ்நிலை மாறியதால் விதிகள் திருத்தப்பட்டன. பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது. கட்சி விதி தெளிவாக உள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
ஜூலை 11-ந்தேதி கொண்டு வரப் பட்ட திருத்தங்கள் சட்ட விரோதமானவை அல்ல. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியின் செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. அடுத்த தேர்தலுக்கு முன்பு திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் வரும், பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட முடியாது. இவ்வாறு அவர் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இப்போது என்ன அவசியம்? பொதுக்குழு தொடர்பான வழக்கு ஏப்ரல் 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இந்த தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டுள்ள இந்த வழக்கையும் சேர்த்து விசாரித்தால் என்ன? பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்திருப்பதால் இன்றே முடிவை அறிவிக்க முடியும். எனவே முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தால் என்ன? இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள், “தேர்தல் முடிவை அப்படி நிறுத்தி வைக்க முடியாது. இது உள்கட்சி விவகாரம்” என்றனர்.
இதையடுத்து நீதிபதி குமரேஷ்பாபு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. அதற்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ந்தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும். 2 வழக்குகளிலும் 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும். எனவே 24-ந்தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.