கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர்

தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் இலவசமாக பொது வைபை சேவைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதனால் இனி பொதுமக்களும் அரசின் இலவச வைபை வசதியை பயன்படுத்தமுடியும்.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த 2023-2024 நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை, மதுரை, தாம்பரம், ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் விரைவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வைபை சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு பகுதியாக பொதுமக்கள் பயன்படுத்த வைபை வசதி அமைக்கப்படும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த புதிய வைபை பற்றிய அறிவிப்பு நிச்சயம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இணையத்தளம் மூலமாக பணப்பரிவர்த்தனை, வணிகம், பொழுதுபோக்கு என அனைத்தும் வந்துவிட்டது. இது இல்லாமல் மக்களின் வாழ்வு தற்போது கடினமாக மாறும் சூழல் இருப்பதால் தமிழ்நாடு அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தவிர சென்னை, ஓசூர், கோவை போன்ற நகரங்கள் டெக்னாலஜி நகரங்களாக மாற்றவும் தமிழ்நாட்டை உலகில் இருக்கும் முக்கிய IT இடமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவை, மதுரை மாநகரங்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.

சென்னைக்கு அடுத்தப்படியாக பெரிய நகரங்களான கோவை, மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். ஆகவே இந்த இரு நகரங்களையும் அதை சுற்றியுள்ள பகுதிளையும் உள்ளடக்கிய அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில் மிகு கோவை மற்றும் மா மதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடி நீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவை இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.

தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத் திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும். இம்மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 24, 476 கோடி ரூபாயும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு 13,963 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மட்டும் 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 8500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை மையமாக வைத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வட சென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய், சைதை – தேனாம்பேட்டை மேம்பாலம் ஆகிய அறிவிப்புகள் வரவேற்பு பெற்று வருகின்றன. தமிழக அரசால் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. 1315 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் காலங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும், நீர் வழிப் பாதைகள் தூர்வாரும் பணிகளுக்கும் 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சீரான சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வட சென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். சென்னைத் தீவுத் திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ 621 கோடி ரூபாய் செலவில் 4 வழித்தட மேம்பாலம் கட்டப்படும். சென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பேருந்து பணி மனைகள் ரூ 1200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். ரூ.1500 கோடி மதிப்பீட்டில் அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைக்கப்பட்டு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் பொதுக் கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகள் இயங்கி வரும் கழிப்பறைகளை சீரமைத்தல் மற்றும் அதன் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு, தனியார் பங்களிப்புடன் ஒரு முன்னோடி திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தின் பிற மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பாதுகாப்பில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. பழைய அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாக கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக் கடன் முன்பணம் (Home Loan Advance) 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு பின் இந்த நிதி உதவிக்கான கோரிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு 2021-22ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக அரசு வழங்கியுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போது இறந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத் தொகை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ,40 299 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குடிமைப்பணி பயிற்சி வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும். குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிடிஆர் கூறினார்.

அத்துடன் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், சென்னையில் அதிநவீன வசதிகளுடன் விளையாட்டு மையம் அறிவிப்பு வெளிடப்பட்டிருக்கிறது.