அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்பங்களின் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போதே சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் உரை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
திமுக ஆட்சியில் இதுவரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றின் விலைவாசி உயர்வு தான் மக்களுக்கு கொடுத்த பரிசாக பார்க்கின்றனர். 23 மாத கால ஆட்சியில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். நடப்பாண்டு 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாக சொல்கிறார்கள். இருப்பினும் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவும் இல்லை. கலால் வரி உயர்ந்துள்ளது, பெட்ரோல் – டீசல் வருவாய் உயர்ந்துள்ளது, பத்திரப்பதிவு துறை வருவாய் உயர்ந்துள்ளது, சாலை வரி உயர்ந்துள்ளது. இவ்வாறு அனைத்து வரி வருவாயும் உயர்ந்திருக்கிறது. எனவே பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். ஆனால் வருவாய் பற்றாக்குறை 60 ஆயிரம் கோடியை 30 ஆயிரம் கோடியாக குறைத்துவிட்டோம் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் நிதி நிலைமையை சீர்செய்ய பன்னாட்டு அளவிலான சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு என்னென்ன பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது? அதில் எவற்றை எல்லாம் அரசு செயல்படுத்தியது? அதன்மூலம் எவ்வளவு கூடுதல் வருவாய் கிடைத்தது? போன்ற தகவல்கள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறினர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி கேட்டால் நீட் தேர்வு ரகசியம் என்பது சட்டப் போராட்டம் தான் என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். இதை அதிமுக நடத்தவில்லையா? இந்த ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
ஆதி திராவிட மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஊடகங்களில், பத்திரிகைகளில் பார்த்து கொண்டிருக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான்கே நாட்களில் 23 கொலைகள் நடந்தன. ஒரே நாளில் மட்டும் 13 கொலைகள் நடந்துள்ளன. எனவே சட்டம், ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டு போய்விட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தை எங்கே குறைத்துள்ளனர்? அப்படி எதுவும் நடக்கவில்லை.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்ட அறிவிப்பில் தகுதியான நபர்களுக்கு என்று அறிவித்துள்ளார்கள். எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள். அதுமட்டுமல்ல 7,000 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கியுள்ளீர்கள். இதை வைத்து ஒரு கோடி பேருக்கு ஒதுக்க முடியுமா? எனத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட் இது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.