பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பு!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பபட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தில் விளம்பரங்களை வெளியிட நிறுவப்பட்ட தொலைக்காட்சித் திரைகளில், மூன்று நிமிடங்களுக்கு ஆபாசபடம் ஓடியதால் நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பயணிகள் நேரத்தை வீணடிக்காமல், அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) ஆகியவற்றில் புகார் அளித்தனர். ஆனால் அரசு ரயில்வே காவல்துறை நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை விரைவாக செயல்பட்டு, திரைகளில் விளம்பரங்களை இயக்குவதற்குப் பொறுப்பான ஏஜென்சியான தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மக்கள் முன்னிலையில் ஆபாச கிளிப்பை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு ஏஜென்சி நடத்துபவர்களிடம் கேட்டுக் கொண்டது.

பின்னர், ரயில்வே அதிகாரிகளும் நடவடிக்கையில் இறங்கி, தத்தா கம்யூனிகேஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஏஜென்சியை ரயில்வே கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் உள்ள தொலைக்காட்சி திரைகளில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஏஜென்சிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரயில்வே அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ரயில்வே துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆபாச வீடியோ குறிப்பாக பிளாட்பார்ம் எண் 10 இல் ஒளிபரப்பப்பட்டது குறித்து சில அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த பயணிகள் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். வைரலான வீடியோ நாடு முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து வயதினர் முன்பும் ஆபாசபடம் ஒளிபரப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.