மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் ஆர்.சரத்குமார் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கவர்னர் நிராகரித்து இருக்கக்கூடாது. அதை சட்டமாக்க அவர் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்தேன். நான் மட்டும் அதில் நடிக்கவில்லை. பலரும் நடித்து உள்ளனர். அப்போது நான் சட்டத்திற்கு புறம்பாக செயல்படவில்லை. சூதாட்டத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை சட்டமாக்க வேண்டும் என்று இப்போது நான் உறுதியாக கூறுகிறேன். டாஸ்மாக் வருமானத்தை வைத்து தான் அரசாங்கம் நடக்கிறதா? என்றால் இல்லை. மணல் மற்றும் கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே அதிகமான வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. முதலில் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணிக்கு திறந்து 10 மணிக்கு மூட வேண்டும். இப்படி செய்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூட இது உந்துதலாக இருக்கும்.
ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு செல்லும்போது அவர் கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டமாக இருந்தால் அதை வரும் ஆட்சியாளர்கள் தொடர வேண்டும். மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன். அப்போது பலரும் என்னிடம் ஏன் இதுபோன்று கூறுகிறீர்கள் என்று தெரிவித்தனர். எதற்காக நான் சொன்னேன் என்றால் வடமாநிலத்தவர்கள் இங்கு தவறு செய்து விட்டு சென்றுவிட்டால் அவர்களை பிடிக்க முடியாது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பதிவு செய்து கொள்வது நல்லது. இவ்வாறு சரத்குமார் கூறினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதை தடை செய்யும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யவேண்டும்.
என்.எல்.சி.யின் 3-வது சுரங்க விரிவாக்கத்துக்காக கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் வீடுகள், நிலங்களை கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும்.
காமராஜரால் தொடங்கப்பட்ட சென்னை மாதவரம் பால்பண்ணை பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை அரசு முறையாக பராமரிக்க வேண்டும்.
ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். மஞ்சள் சாகுபடியில் சாதனை படைத்து வரும் ஈரோடு மாவட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் மஞ்சள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டும் வருகிற 26-ந்தேதி சேலத்தில் ‘சமத்துவ விருந்தும்’, அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக சமத்துவ விருந்தும் நடத்த வேண்டும்.
பவானி முதல் ஈரோடு வரை செயல்படும் சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும்.
நீட் நுழைவு தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
தேவையற்ற இலவசம் வழங்குவதை தவிர்த்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.