திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
இது குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது:-
சிலர் வடமாநில தொழிலாளர்களை அடித்து விரட்டுவோம், கஞ்சா கேஸ் போடுவோம் என கூறிவருகின்றனர். அதானி, அம்பானி போன்ற முதலீட்டு வந்தேறிகள் அல்லவா எதிர்க்கப்பட வேண்டியவர்கள், விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை விட்டு விட்டு 100 ரூபாய் வாங்க இடத்தில் 50 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு, 3 வேளை சாப்பிட முடியாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விட்டு தமிழ் முதலாளிகளின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தொழிலாளர்களை விரட்டுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. முதலாளிகளை, சுரண்டல்வாதிகளை விட்டு விட்டு தொழிலாளர்களை விரட்டுவது என்பது அயோக்கியத்தனம். பிறமொழி பேசுவதற்காகவே ஒருவனை அடித்து விரட்டுவது என்பது இனவாதம். இனவாதம் பேசினால் அது இனவெறிக்குள் போய் முடியும். இனவெறி என்பது தமிழ் தேசியம் அல்ல, தமிழ் தேசியத்தின் எதிரி இந்திய தேசியமாகத்தான் இருக்க முடியும்.
அவர்களே கற்பனை செய்து கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாக பெரியாரை எதிர்க்கிறார்கள். பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றால் பார்ப்பனியத்திற்கு துணை போகிறார்கள் என்று பொருள். பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றால் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை எதிர்ப்பதாக பொருள். திராவிடம் என்பது சமூகநீதிக்கான அரசியல், ஆரியத்திற்கு எதிரான அரசியல், அதை முதன்முதலில் உச்சரித்தது பண்டிதர் அயோத்திதாசர்.
திராவிடத்தை எதிர்க்கூடியவன் பெரியாரை எதிர்க்கக்கூடாது, பண்டிதரை தான் எதிர்க்க வேண்டும். ஆரியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். கோல்வாக்கரை எதிர்க்க வேண்டிய இடத்தில் பெரியாரை எதிர்க்கிறார்கள். இது திரிபுவாத அரசியில். இத்தகைய போலி தமிழ்தேசிய திரிபுவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.