சொன்னதை செய்யும், செய்வதை சொல்லும் முதல்வருக்கு நன்றி: செந்தில் பாலாஜி!

தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொன்னதை செய்து இருப்பதாக நன்றி தெரிவித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடியது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் பட்ஜெட்டில் இந்த திட்டத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தால் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

இந்த நிலையில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக முதல்வர் சொன்னதை செய்து இருப்பதாக நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி தனது டுவிட்டரில் “குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000/- வழங்கிட ஆணையிட்ட, சொன்னதை செய்யும், செய்வதை சொல்லும், திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலினுக்கு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். #TNBudget2023” என்று பதிவிட்டுள்ளார்.