கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது: மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

உலக நாடுகளையே உலுக்கிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட தவறவில்லை. 2021-ல் 2-வது அலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, மருந்து பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அரசின் தீவிர நடவடிக்கை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா மறைந்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்து சகஜ நிலைக்கு திரும்பினார்கள். ஆனால் இந்த வைரஸ் முற்றிலும் மறைந்து விடாமல் இந்தியாவில் பரவும் நிலையை மீண்டும் அடையலாம் என்று அப்போதே நிபுணர்கள் கூறியது போல் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. அதிலும் அசுர வேகத்தில் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 350 பேர் வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நேற்று 76 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகி இருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்கான விதிமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பயப்பட தேவை இல்லை. கொரோனா கட்டுப்பாட்டை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க வேண்டும்.

கடந்த வாரம் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறைச் செயலாளரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வருவதாக கூறியிருந்தனர். கடந்த எட்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2 என்ற அளவில் தான் இருந்தது. கொரோனா உயிரிழப்பே இல்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 76ஆக அதிகரித்துள்ளது.

உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை. H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். வாரந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.