சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு செயல்பட்டு வருகிறது. டெல்லி பாஜக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அண்மையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து தமது பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் புதிய நிதி அமைச்சராக கைலாஷ் ஹெக்லோட் பதவியேற்றார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மாநிலா பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. இதனால் மார்ச் 10-ந் தேதி, பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் அனுப்பி வைத்தார். இதனையடுத்து டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். ஆனால் திடீரென மார்ச் 17-ந் தேதி மத்திய அரசு, டெல்லி தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தது. அதில், மத்திய அரசானது டெல்லி யூனியன் பிரதேச பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது டெல்லி அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநில அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 75 ஆண்டுகால இந்திய வரலாற்றில் மாநில அரசின் பட்ஜெட்டை மத்திய அரசு தடுத்து நிறுத்தியது இதுவே முதல் முறை. டெல்லி மக்களை ஏன் இப்படி துயரத்துக்குள்ளாக்குகிறீர்கள்? டெல்லி மக்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்? டெல்லி மாநில அரசின் பட்ஜெட்டை தயவு செய்து தடுத்து நிறுத்த வேண்டாம் டெல்லி மக்கள் கையெடுத்து கும்பிடுகிறோம் என கூறியுள்ளார் கெஜ்ரிவால்.