தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம், என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் இப்போது தகுதியான மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமை தொகை என்று சொல்லியிருப்பதன் மூலம் உங்களுடைய உள்நோக்கம் என்னவென்று புரிந்துவிட்டது என சசிகலா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இதில் மக்கள் எதிர்பார்த்த சலுகைகள் ஏதும் இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைக்கு மூன்றாவது முறையாக நிதிநிலை அறிக்கையும் தாக்கலாகிவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை, மாறாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதாவது திமுக ஆட்சியில் அமர்வதற்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’ என்று சொல்லி, மக்களை நம்ப வைத்து ஆட்சியையும் பிடித்தது. ஆனால் நீங்கள் சொன்னதுபோல நடந்து கொண்டீர்களா என்றால் அதுவும் இல்லை? நீங்கள் சொன்னது என்ன? இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
சொத்துவரி கூட்டப்படாது என்று சொன்னீர்கள், ஆனால் வரலாறு காணாத அளவில் 150 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு மிகப்பெரிய சுமையை அளித்தீர்கள். அதேபோன்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இன்னும் ஏராளமான வாக்குறுதிகளை திமுகவினர் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லி அரசு ஊழியர்களை நம்பவைத்து அவர்களது எந்த கோரிக்கையையும் இதுவரை நிறைவேற்றாமல், அவர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த சலுகைகளையும் பறித்துக்கொண்டதுதான் மிச்சம். அதாவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியினை ஆறு மாதம் காலந்தாழ்த்தி நிலுவைத் தொகையினையும் மறுத்து, 15 நாட்கள் சரண் விடுப்பு சலுகையினையும் பறித்து கொண்டு அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளீர்கள். தற்போது ராஜஸ்தான், ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தொடங்கிவிட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம், ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்து குடும்பங்களும் இதனால் பயனடையும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் இப்போது என்னவென்றால் தகுதியான மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமை தொகை என்று சொல்லியிருப்பதன் மூலம் உங்களுடைய உள்நோக்கம் என்னவென்று புரிந்துவிட்டது. அதாவது, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் தோறும் 1,000 ரூபாய் கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.
தமிழ்நாட்டில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று திமுகவினர் தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்களை நம்பவைத்து ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து, பின்னர் இன்றுவரை நிறைவேற்றாமல் அதற்கு மாறாக தற்போது வரலாறு காணாத அளவில் மின் கட்டணத்தை உயர்த்தி அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதுதான் திமுகவினரின் ‘சொன்னதை செய்வோம்’ என்ற தாரக மந்திரமா? என்று தமிழ்நாட்டு மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். 2013-2014 – 1,66,000 கோடி இருந்த தமிழ்நாடு அரசின் கடனானது இன்று 7,26,028.93 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இத்துடன் மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்களின் கடனுடன் சேர்த்தால் சுமார் 10 லட்சம் கோடியை தாண்டும். இதன் காரணமாக வட்டி சுமையும் ஏறிக்கொண்டே இருப்பதால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலம். கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் காவிரியில் பாய்ந்து கடலில் வீணான நீர் 444 டி.எம்.சி என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள காவிரி-குண்டாறு இணைப்பு, கருமேனியாறு-திருமேனியாறு – தாமிரபரணி ஆறு இணைப்பு பற்றி எந்த திட்டமும் இல்லை. புதுமைப்பெண் திட்டத்தின் பயனாளி மாணவிகள் சுமார் 6 லட்சம் என அறிவித்துவிட்டு தற்போது 2.2 லட்சம் மாணவிகள் பயன்பெறுகிறார்கள் எனக் கூறுகிறார்கள். ஜெயலலிதா முதியோர் ஓய்வூதியத் தொகையை, 2011ஆம் ஆண்டு 1,000 ரூபாய் என உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம் 36 லட்சம் நபர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் இன்றைக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை யாருக்கும் கிடைப்பதில்லை என்று நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் என்னை சந்திப்பவர்கள் சொல்லி மிகவும் வேதனைப்படுகிறார்கள்.
ஜெயலலிதா ஏழை எளிய சாமானிய மக்களின் பசியாற கொண்டு வந்த அம்மா உணவக திட்டம் இன்றைக்கு அழியும் நிலையில் உள்ளது. திமுக அரசு பதவியேற்றவுடன் மாநில அரசின் சொந்த வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். குறிப்பாக கனிமவளத்துறையின் மூலம் வருவாய் 1,000 கோடியை 10,000 கோடியாக உயர்த்துவோம் என்றார்கள். அது பற்றி நிதி நிலை அறிக்கையில் எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் 4.5 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்புவதற்கான எந்த அறிவிப்பும் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெறாததால், நம் இளம் சமுதாயத்தினர் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிகாலங்களில் “Performance budget” என சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொகுப்பை வெளியிடுவார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் இதுபோன்று தொகுப்பை ஏன் வெளியிட தயங்குகிறார்கள்? என்று தெரியவில்லை. எனவே துறைவாரியாக “Performance budget” வெளியிட்டால்தான் ஏற்கனவே அறிவித்த திட்டங்களின் கதி என்ன என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு மிச்சம் இருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பயனளிக்கின்ற திட்டங்களை அளிக்க திமுக தலைமையிலான அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.