என்.எல்.சி. குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததது வருத்தம் அளிக்கிறது: வேல்முருகன்!

என்.எல்.சி நிர்வாகத்தால் வதைக்கப்படும் மக்களின் பாதுகாப்புக்காக வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது திட்டத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாததது வருத்தம் அளிக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் திமுக கூட்டணி எம்.எல்.ஏவான வேல்முருகன் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

75 லட்சம் மரக்கன்றுகள் நடுதல், நலிந்த மக்களுக்கு மின் இணைப்புகளை வழங்கி விவசாயத்தில் ஈடுபடச் செய்வது, சிறுதானியங்களுக்கென தனி இயக்ககம், மத்திய அரசுடன் இணைந்து ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குதல், பனைக்கென்று தனி இயக்கம், மிளகாய், வாழை, முந்திரி, முருங்கை உள்ளிட்டவற்றிற்கு தனி இயக்கம் என்று பல்வேறு பணப் பயிர்களுக்கான சாகுபடியை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய நல்ல திட்டங்களை அறிவித்துள்ளனர். அதை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது.

உற்பத்தி செய்யும் அனைத்து விளை பொருட்களுக்கும் நியாயமான விலை நிர்ணயம் வேண்டும் என்பதை வேளாண் துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். அதேபோல, இந்த பணப்பயிர்கள் விளையும் நிலத்தை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகம் விவசாய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த மக்களின் பாதுகாப்புக்காக வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது திட்டத்தை அறிவிப்பார்கள், என்று எதிர்பார்த்தோம். மாற்று விவசாய நிலம் தருவார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை தருவார்கள் என்ற எதிர்பார்த்தேன். அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாததது வருத்தம் அளிக்கிறது. அந்தவகையில், பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான நியாயமான விலை நிர்ணயம் இல்லாததும், என்.எல்.சி பகுதி விவசாயிகளுக்கு மாற்று நிலம் தரும் அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.