வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை!

கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனிடையே இன்று வேளாண் பட்ஜெட்டினை வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திறகு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு கரும்பு சாகுபடியை அதிகரிக்க வழிவகுக்கலாம். உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுக்கலாம். கரும்பு விவசாயிகளையும் ஊக்குவிக்கும் விதமாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கலாம்.

விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். அத்தகைய விவசாயத்திற்கு தமிழக பட்ஜெட்டில் தனியாக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இன்றைய பட்ஜெட் அறிக்கையில் பலரின் கவனத்தையும் ஈர்த்த மற்றொரு அறிவிப்பு வெளிநாட்டு வேளாண் தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை மாநிலங்களில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளி நாட்டில் பயிற்சி பெற 3 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மேலும் நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள வட்டியில்லா கடன் உதவி வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு. சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி 2.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்டதாரிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது விவசாயத் துறையை மேம்படுத்துவதோடு, வளர்ச்சியினையும் மேம்படுத்தும். 2021 – 22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ 4 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 200 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.

இது விவசாயத்துறைக்கு பக்கபலமாக அமையலாம். குறிப்பாக சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் சிறு தானியங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரிந்து வரும் சிறு தானிய உற்பத்தியினையை மீட்டெடுக்க உதவும் எனலாம். இது தவிர நெல்லுக்கு பிறகு மாற்று பயிர் சாகுபடி முறைக்கு 24 கோடி நிதி உதவி, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும். சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபபட்டுள்ளது.

கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்று, விவசாயிகளிடம் பல மாவட்டங்களில் ஆலோசனை கேட்கப்பட்டது. துறைசார்ந்த அலுவலகர்கள் சென்று விவசாயிகள், வேளாண் பொருட் உற்பத்தியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் 25 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 5 லட்சத்து 36000 ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1.82 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதால் விவசாய சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் கிராமங்களில் 250 உலர்களங்கள் கட்டப்படும். சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும்.
கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சாமை,குதிரைவாலி போன்ற ஆகியவை சிறுகு தானியங்கள். சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டில் நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரேசன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விற்பனை செய்யப்படும். 2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களுக்கு ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்களுக்கும் விவசாயிகளுக்கும் மானியங்கள் அளிக்கப்படும். மத்திய மாநில அரசு உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, கேழ்வரகு, கம்பு போன்றவை நேரடியாக கொள்முதல் செய்யப்படும். கம்பு, கேழ்வரகு கொள்முதல் செய்து கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். தமிழ்நாடு அரசால் ரூ.1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்புக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் விவசாயிகள் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும். 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலையை அதிகரிக்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகள் 200 பேரை தேர்ந்தெடுத்து புதிதாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும், தமிழ்நாடு முழுவதும் 14,500 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை நல்ல விளைச்சலை தந்து கொண்டிருக்கிறது. மதுரை மல்லிக்கான புவிசார் குறியீடு கடந்த 2013ஆம் ஆண்டு பெறப்பட்டது. இதற்கான பெருமை மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினரை சேரும். இங்கு விளையும் மல்லி மட்டுமே மதுரை மல்லி என்பது கவனிக்கத்தக்கது. இது இரண்டு நாட்கள் வரை வாடாமல் இருப்பது கூடுதல் சிறப்பு. மற்ற மல்லிகைப் பூக்கள் ஒரே நாளில் வாடிவிடும். மதுரைக்கும், மல்லிக்கும் இடையிலான தொடர்பு சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. எனவே மல்லிகைக்கு புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்தது. தற்போது மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுமார் 4,300 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும். இந்த திட்டம் தொடர் திட்டமாக 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மல்லிகை தொகுப்பிற்கு தேவையான தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்க வழிவகை செய்யப்படும்.

மல்லிகை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கவாத்து செய்யவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஆண்டு முழுவதும் மல்லிகை பூக்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இந்த திட்டம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதுதொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி புதிய ரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்த பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் வலுப்படுத்தப்படும். வரும் ஆண்டில் இந்த இயக்கத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.