உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உகாதி பண்டிகை இன்று ஆந்திரா, கர்நாடகாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை திருப்பதி தேவஸ்தான கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே பெருமாளை தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துச்செய்தியில் உகாதி, குடீ பாடவா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளையொட்டி தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி மற்றும் தமிழ், இந்தி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற வருட பிறப்பு பண்டிகைகள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
உகாதி திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,” உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும் வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து, உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தவர் கருணாநிதி என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். விந்திய மலைக்குத் தெற்கே பரந்து வாழும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய உறவும் ஒற்றுமையும் வலுப்பட வேண்டும். திராவிட இன மக்களுக்குள்ளான ஒற்றுமை மிளிர்ந்து, சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடவும், நமது மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளைக் காத்து உலகளவில் சிறந்து விளங்கிடவும் வேண்டும் என உகாதி திருநாளில் வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இனிய உகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.