என்.எல்.சி நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது அவரிடம் என்.எல்.சி தொடர்பாக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து, அவற்றை நிறைவேற்றித் தர வலியுறுத்தியுள்ளார் அண்ணாமலை.
என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தவும், இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நெய்வேலி அருகே உள்ள மதுவானமேடு, கரைமேடு, கோபாலபுரம், ஊ.ஆதனூர், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, சாத்தப்பாடி, கத்தாழை, கரிவெட்டி, மும்முடிச்சோழகன் உள்ளிட்ட கிராம மக்கள், தங்களுக்கு முறையான இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த விடுவோம் எனக் கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்.எல்.சி தனி இயக்குநர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்படுத்த வேண்டும் என்றும், உள்ளூர் இளைஞர்களை குறைந்தபட்சம் மேற்பார்வையாளர் வேலை வரையிலுமாவது நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணாமலை. மேலும் நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுக்கு ஒரு வேலை என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. 1990 முதல் வெவ்வேறு காலகட்டங்களில் நிலம் கொடுத்த பொதுமக்கள் வீட்டில், ஒருவருக்கு வேலை என்ற நியாயமான கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அண்ணாமலை. அது மட்டுமல்லாது, புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது, மத்திய அரசு கொடுத்துள்ள வழிமுறைப்படி, நில உரிமையாளர்களுக்கான உரிய இழப்பீடுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், என்.எல்.சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியை நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அதிகளவில் செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்ணாமலை முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கும், மற்ற உயர் அதிகாரிகளுக்கும் எடுத்துச் சொல்வதாக என்.எல்.சி தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரி அண்ணாமலையிடம் உறுதி அளித்துள்ளதாக பாஜகவின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்.எல்.சி விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள முக்கியஸ்தர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் நேரில் பேசுவதற்கான ஏற்பாட்டையும் தமிழ்நாடு பாஜக மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.