கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிரதமர் மோடி பிறப்பித்தார்.

இந்தியாவில் தற்போது 7,026 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை இது. கொரோனா பாதிப்பில் இது 0.01 சதவீதமாகும். மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.79 சதவீதம். இன்று காலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் 662 பேர் கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,60,279 பேர். அதேநேரத்தில் இந்தியாவில் இன்று காலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது. நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 1.09% வாராந்திர பாதிப்பு விகிதம் 0.98% ஆகும்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 92.05 கோடி கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,831 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 7,673 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தலைநகர் டெல்லியில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,000-த்தை தாண்ட தொடங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பிரதமர் மோடி நேற்று மாலை 4.30மணிக்கு துறைசார் செயலாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார். அதன்படி இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல், கண்காணித்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் எனும் வகையில் டெஸ்ட், ட்ராக், ட்ரீட், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ்களின் மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய மாதிரி சிகிச்சை முறை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.