மது விற்பனையை உயர்த்தி இருப்பதுதான் தி.மு.க. அரசின் சாதனை: அண்ணாமலை

மக்களை கசக்கிப்பிழிந்து வரிகளை எல்லாம் வசூலித்துவிட்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்துவிட்டோம் என்று தமிழக அரசு எப்படி சொல்கிறது? என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தள்ளாடிக்கொண்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையால் மட்டுமல்ல, தமிழக அரசின் திறமையின்மையால் வருமானத்தை பெருக்குவதற்கான வழிவகைகளை ஆராயாமல், ஆக்கப்பூர்வமான வருமானத்தை பெருக்கும் ஆற்றல் இல்லாமல், ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். தமிழக மக்களை எல்லாம் மதுவுக்கு அடிமை ஆக்கி, இந்த மாநிலம் சாதிக்க நினைக்கும் மகத்துவம் என்ன? ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குள்ளாக மது விற்பனையை ரூ.45 ஆயிரம் கோடிக்கும் மேல் உயர்த்தி இருப்பதுதான் தி.மு.க. அரசின் சாதனை. மது விற்பனையை மேலும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பதை மிக ஆழமாக சிந்திக்கவேண்டும். ஊழலுக்கு வாய்ப்பு தமிழக மக்களை எல்லாம் குடிகாரர்களாக மாற்றும், உடல் நலத்தை கெடுக்கும், மது விற்பனை அதிகரிப்பது என்பது ஒரு மாநில அரசு செய்யும் வேலையா? தமிழ்நாட்டில் மட்டும்தான் மிக விசித்திரமாக குடும்பத்தை கெடுக்கும் மது விற்பனையை அரசாங்கமும், அறிவுசார் கல்விக்கூடங்களை தனியார்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்து தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு என்னத்தகுதி தேவைப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. இப்படி செய்வதால், தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் இந்தப்பணத்தை வழங்குவதற்கான ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் ‘கடன் சுமையை குறைப்போம்’ என்று வாக்குறுதி தந்து விட்டு, 2023-24-ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்தக்கடன் சுமை ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடி என்ற அளவில் இருக்கும் என தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. இன்றைக்கு உள்ள சூழலில் தமிழகத்தில் 2.20 கோடி குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேல் கடன் உள்ளது. தமிழக அரசு ஆலயங்கள் நடத்தும் கல்விக்கூடங்களை அரசுடமையாக்கக் கூடாது. பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, மத்திய அரசு விலை குறைத்தும் தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்று வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்திவிட்டு, மக்களை கசக்கிப்பிழிந்து வரிகளை எல்லாம் வசூலித்துவிட்டு, போதாக்குறைக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு மதுபான போதையிலேயே தமிழகத்தை மூழ்கவிட்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்துவிட்டோம் என்று தமிழக அரசு எப்படி சொல்கிறது?

தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான எந்தப்புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. அரசின் செலவினங்களை குறைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதுவுமே செய்யாமல் நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழகத்தின் தள்ளாட்டத்தை நிறுத்தமுடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.