நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதி திருச்சி சிவாவுக்கும் ஏற்படுமா?: எச் ராஜா

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதிதான் திருச்சி சிவாவுக்கு ஏற்படுமா என்பது போன்ற பல கேள்விகள் திமுகவின் வன்முறையை பார்த்ததால் எழுந்து கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக சார்பில் 9ஆம் ஆண்டு சாதனை விளக்க மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேசியதாவது:-

திமுக என்றாலே வன்முறை கட்சி என அனைவருக்கும் தெரியும். அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகிறார்கள். திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் திருச்சி சிவாவுக்கும் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் ஒரு பாஜககாரர் கூட உயிரோடு இருக்க முடியாது என பேசிய ஆர்.எஸ்.பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தெரியவில்லை. ஸ்டாலினுக்கு நிர்வாகம், கட்சி, குடும்பம் என எதன் மீதும் கட்டுப்பாடு இல்லை. இந்த மாதிரியான பரிதாபகரமான நிலையாக உள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தறும் மின்கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை, கடந்த பட்ஜெட்டில் 2,718 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றனர். அதுகுறித்து எந்த தகவலும் இல்லை. அதற்குள் இந்த பட்ஜெட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ 7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 60 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் கொடுக்கலாம். இதுவரை என்ன தகுதி என அறிவிக்கப்படவில்லை. அப்படிஎன்றால் ஒரு வேளை திமுககாரர்களுக்கு மட்டும் ரூ 1000 கொடுக்க போகிறார்களோ என்னவோ?. இவ்வாறு எச். ராஜா கூறினார்.