2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்கவே, குஜராத் நீதிமன்றம் அவருக்கு சிறைதண்டனை வழங்கியுள்ளதாகவும், இது பாஜகவின் சதி செயல் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது, பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த முறை அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை போன்று, இம்முறை வெற்றி பெற முடியாது என்பதையே கருத்து கணிப்புகள் கூறிவருகின்றன. ஆனால் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதற்கு எதிர்கட்சிகளின் ஒற்றுமை தடையாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். எதிர்கட்சிகள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓரணியில் தேர்தலை சந்தித்தால், நிச்சயம் பாஜக தோற்பது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் கூட்டணி உருவானால் அது பாஜகவிற்கு சாதகமாக அமையும் எனவும் கூறுகின்றனர். பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரளா முதல்வர் பினராய் விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இத்தகைய செயல்பாடுகள் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டது பாஜகவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த மேடையில் பேசிய அனைவருமே, எதிர்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியதும் பாஜகவிற்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்கும் வேளையில் பாஜக இறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். அதனால் தான் இந்தி பேசும் மாநிலங்களில், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகளை பாஜகவினர் பரப்பியதாக கூறப்படுகிறது. அதேபோல் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்விற்கு சம்மன் அனுப்பப்பட்டு விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் தான் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுப்பதற்கும், மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவும் இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு மக்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதேபோல் அருணாச்சல் பிரதேசம் முதல் குஜராத் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு ராகுல் காந்திக்கு அதிகரிப்பதை உணர்ந்து கொண்ட பாஜக, அவரை தடுத்து நிறுத்த சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதை உறுதிபடுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் டுவிட்டர் பதிவும் அமைந்துள்ளது. இது குறித்து அவர் தனது பதிவில், ‘‘விசிக சார்பாக சதி செய்த பாஜகவின் மலிவான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்கள் சங் பரிவாரங்களைத்தான் அம்பலப்படுத்தும். இந்திய மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள்’’ என கூறியுள்ளார்.