தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த கடந்த 6 ஆம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தனது விளக்கத்தில் ஆளுநர் கூறியிருந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று தமிழக சட்ட சபையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்கள் குறித்தும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். பின்னர் மசோதாவை ஆதரித்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினர். சட்டமன்றத்தில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 8 பக்கங்கள் கொண்ட இந்த மசோதா பேரவை அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில், ஆளுநர் மாளிகைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.