முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் அணை, பேபி அணையை பார்வையிட்டது. நீர்க்கசிவு காலரியில் தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்திற்கேற்ப நீர்க்கசிவு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது சரியான அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் இயக்கி பார்க்கப்பட்டது. இயக்கமும் சரியாகவே இருந்தது. இந்த ஆய்வில் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர்கள் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் உடன் இருந்தனர். ஆய்வு முடிந்தவுடன் குமுளியில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பின்னர் மத்திய கண்காணிப்பு குழுத் தலைவர் விஜய்சரண் கூறுகையில், வல்லக்கடவிலிருந்து அணைப் பகுதிக்கு வரும் வனப்பாதையை ஆய்வு செய்தோம். அதை சீரமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். அணை பராமரிப்பு பணிகளுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அணையை ஒட்டியுள்ள பேபி அணை பலப்படுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீர், நீர்மட்டத்திற்கு ஏற்ப சரியான அளவிலேயே உள்ளது. ஷட்டர்களின் இயக்கமும் சரியாகவே உள்ளது என்றார்.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு நடத்தும் போது தமிழக,-கேரள பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஆய்வுக்கு அணைப்பகுதிக்குச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அணையில் நடக்கும் உண்மை நிலவரம் வெளிக் கொண்டுவரவிடாமல் மறைக்கப்படுவதாக தமிழக விவசாய சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர்.