காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நிலையில், ‘அவரை, வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம்’ என, நேபாள அரசை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரும், தீவிரவாத போதகருமான அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, அம்ரித்பால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அமிர்தசரஸ், ஹரியானா, புதுடெல்லி உட்பட பல்வேறு இடங்களில், தன் அடையாளங்களை மாற்றியபடி சுற்றித் திரிந்த அம்ரித்பால், தற்போது நம் அண்டை நாடான நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்ரித்பால் இங்கிருந்து வேறுநாடு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என நேபாள அரசை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகம், நேபாள குடியேற்றத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் இருந்து தப்பிய அம்ரித்பால், தற்போது நேபாளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர், வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம். இந்திய பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் வாயிலாக வேறு நாட்டுக்கு செல்வது தெரியவந்தால், உடனடியாக கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட முக்கிய இடங்களுக்கு அம்ரித்பாலின் புகைப்படம் மற்றும் விபரங்களை அனுப்பியுள்ள நேபாள அரசு, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.