பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்: சீமான்!

கைது செய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கிய காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைதுசெய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப்பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடுஞ்சித்திரவதையில் ஈடுபடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை எனும் பெயரில் வரம்பு மீறி, கொடூரமான மனிதவதையை அரங்கேற்றியுள்ள பல்வீர் சிங்கின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. மனிதநேயம் துளியுமில்லாத பல்வீர் சிங் போன்றவர்கள் மக்கள் சேவைப்பணிகளில் இருக்கவே தகுதியற்றவர்கள்.

ஏற்கனவே, காவல்துறைக்கும், பொது மக்களுக்குமிடையே பிணைப்பில்லாத தற்காலச்சூழலில், இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் காவல்துறை மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை உருவாக்கிவிடும். பல்வீர் சிங்கை காத்திருப்புப்பட்டியலுக்கு மாற்றியிருப்பது போதுமான நடவடிக்கை இல்லை. ஆகவே, காவல் உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டுமெனவும், அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கு தகுந்த மருத்துவச்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.