ஜெமினிகணேசன் பேத்தி, பணமோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.. அத்துடன் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்தவர் மஞ்சு. 37 வயதாகிறது. தி.நகர் ஆர்காட் தெருவில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். திருமணமாகிவிட்டது ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். இரு மகள்களுடன் தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான மஞ்சு, டிவி சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அந்தவகையில், மஞ்சுவிடம் கஸ்டமராக அறிமுகமானவர் அபர்ணா. பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், “சென்னை 28 – பாகம் 2” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அபிநவ் என்பவரின் மனைவிதான் அபர்ணா.. ஒருகட்டத்தில் அபர்ணாவும், மஞ்சுவும் வாடிக்கையாளர் என்ற முறையில் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடம் மஞ்சுவின் மகள் லாவண்யாஸ்ரீ 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விலும் தேர்ச்சி அடைந்தார். பிறகு, லாவண்யா விரும்பிய கல்லூரியில் மருத்துவ சீட் கிடைக்காததால் மஞ்சு தனக்கு தெரிந்த நபர்களிடம் கல்லூரி சீட் குறித்து விசாரித்துள்ளர். இதை கேள்விப்பட்ட அபர்ணா, மஞ்சுவிடம் சென்று, தனக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் லாவண்யாவுக்கு மருத்துவ சீட் வாங்கி விடலாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம் என்றும், மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பிறகு செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் அபர்ணா சொன்னதுபோலவே, அவரது நண்பர் அஜய் வங்கிக்கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கியது போலவே, ஒரு சர்ட்டிபிகேட்டை, மஞ்சுவின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியுள்ளார். இதற்கு பிறகு மஞ்சு, அந்த சர்டிபிகேட்டுடன், ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜூக்கு தன்னுடைய மகளை சேர்ப்பதற்காக அழைத்து சென்றார். அங்கு சர்டிபிகேட்டை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம், இது போலி சர்டிபிகேட் என்று சொல்லியது. இதைக்கேட்டு மஞ்சு அதிர்ந்து போனார். பிறகு, அபர்ணாவிடம் இதை பற்றி கேட்டதுடன், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார் அபர்ணா. மஞ்சு விடாமல் விரட்டவும், திடீரென தலைமறைவாகிவிட்டார் அபர்ணா. இதனால் மேலும் அதிர்ந்துபோன மஞ்சு, மாம்பலம் போலீசில் அர்பணா மீது புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின் பேரில் போலீஸார் அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் மீது மோசடி, போலியான ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து போலீஸார் தலைமறைவான அபர்ணா, அஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.
அபர்ணா ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறாராம். அதாவது நவீன ஆடையகம் சொந்தமாகவே வைத்திருக்கிறார். இந்த கடைக்கு மஞ்சு ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்து வந்துள்ளார்.. அதனால்தான் நெருக்கம் அதிகமாகி உள்ளது. மேலும், அபிநய் ஜெமினி கணேசனின் பேரன் என்பதால், மிகுந்த மரியாதையோடு அபர்ணா குடும்பத்தினரிடம் பழகி வந்துள்ளார் மஞ்சு. 5 லட்சம் ரூபாய் பணத்தை தந்ததுமே, அடுத்த 5வது நாளே மெடிக்கல் காலேஜில் சீட் கிடைத்துவிடும் என்று சொல்லவும்தான், காலேஜ் சென்றுள்ளார் மஞ்சு. அங்கு சென்றதும்தான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துள்ளார். இப்போது அபர்ணாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. அவரை கைது செய்தால்தான், இதுபோல் எத்தனை பேரை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்ற முழு விவரம் தெரியவரும் என்றும் சொல்கிறார்கள்.