பிளஸ்-2 கணித தேர்வில் வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் மொழித் தாள், ஆங்கிலம், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று முன்தினம் கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், கணித பாட மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கும். கட் ஆஃப் மதிப்பெண்ணில் 50% இடம்பிடிப்பது கணிதம் தான் என்பதால், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணித பாடத்தில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். கணிதம் பலருக்கு கடினமாக இருந்தாலும், அதிக சென்டம் வருவது கணித பாடத்தில் தான்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சில வினாக்கள் கடினமாகவும், புத்தகத்திற்கு வெளியிலும் இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். கணிதத் தேர்வில் வினாக்கள் சற்று கடினமாகக் கேட்கப்பட்டதால், இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும், அதன் காரணமாக பொறியியல் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர். கணிதப் பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல.
கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது. 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.