மருத்துவமனைகளில் தான் கொரோனா அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது என்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஞ்சாவும் போதை வஸ்துக்களான பான்பராக், குட்கா போன்றவை அதிமுக ஆட்சியில் தான் அதிகம் இருந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கஞ்சா எங்கும் பயிரிடப்படாத நிலை என்பது இருந்து கொண்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கஞ்சா விற்பனை தாரளமாக கிடைக்கிறது என்கிறார். கஞ்சா விற்பனை என்பது எங்கே இருக்கிறது என்ற தகவலை எங்களிடம் சொன்னால் அந்த கஞ்சாவை காவல்துறையினர் மூலம் அழித்தொழிப்பதற்கும் சம்பந்தபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் சரியாக இருக்கும். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் கஞ்சா நடமாட்டம் இருக்கிறது என்று அவர் செய்யும் அரசியலுக்கு நல்லதல்ல.
நம்முடைய முதல்வர் கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோருடனான கூட்டம் ஒன்றை நடத்தி அந்த கூட்டத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் இருந்த ஓட்டுமொத்த மாணவர்களையும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியினை நடத்தினார். வெளிமாநிலங்களில் இருந்தும் இத்தகைய போதை பொருட்கள் தமிழகதிற்கு வருவதை அறிந்து அப்போது தென் மாநில போலீசாருடனான கூட்டத்தில் ஆந்திராவில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை கூறி, அதில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிரிடப்படுவம் தகவலை தென்மண்டல காவல்துறை உயர் அலுவலக கூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உடனடியாக ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான அந்த 6 ஆயிரம் ஏக்கர் கஞ்சாப் பயிர் அழித்தொழிக்கப்பட்டது என்பது வரலாறு. இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் கூட 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர் வளர்க்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெலுங்கனாவில் இருந்த கஞ்சா தோட்டம் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காய்கறி வாகனங்கள் மூலம் கர்நாடகாவில் இருந்து குட்கா பான்பராக் போன்றவை ஓசூர் போன்ற வழிகளில் வந்த போது எவ்வளவு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விஷயங்களை காவல்துறை அடிக்கடி வெளியிட்டு வந்தது.
காலை உணவு திட்டம் அரசு திட்டமாக எதிர்கட்சியினர் அவர்களது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை. அட்சய பாத்திரா என்கின்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.5 கோடி இந்த திட்டம் என்று குறிப்பிடாமல் அரசின் சார்பில் தந்து, மாநகராட்சியின் இடத்தை தந்து அவர்கள் உணவு சமைப்பதற்கும் பறிமாறுவதற்குமான திட்டம் தொடங்கினார்கள். ஆனால் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசே எந்த தொண்டு நிறுவனத்தின் உதவி இல்லாமல் சிறப்பாக காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வெற்றியை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இந்த அரசின் மீது தேவையில்லாமல் குறை கூறி வருகிறார். இன்றைக்கு “காலை உணவு திட்டம்” என்று குறிப்பிட்டாலே நம்முடைய தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரே நம்முடைய நினைவுக்கு வரும்.
முக கவசம் அணிவது என்பது நாம் தொடர்ச்சியாக தினந்தோறும் செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்லியிருக்கிறேன். நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒருநாள் பாதிப்பு 400இல் இருந்து 600ஐ கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு 2 என்ற எண்ணிக்கையில் தான் இருந்தது. ஆனால் தற்போது 100-ஐ கடந்துள்ளது. எனவே தற்போது பாதுகாப்பாக இருப்பது என்பது அவசியம் ஆகும். இதனால் முக கவசங்களை மருத்துவமனைகளில் மட்டுமாவது கடைப்பிடிக்க அறிவுறுத்துவோம்.. மருத்துவமனைகளுக்கு வருபவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது அவசியமாகும். ஏனெனில் மருத்துவமனைகளில் தான் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது என்பது அவசியம் என்ற வகையில் நாளையோ.. நாளை மறுநாளோ நானும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து பேசி தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற மருத்துவ கட்டமைப்புகளுக்கு அது உறுதி செய்யப்பட்டு அறிக்கையாக அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.