புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு!

பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விரிவான வாகன நிறுத்த பகுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் மோடி இன்று திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி நேரில் ஆய்வு செய்தார்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இப்போதைய நாடாளுமன்றம் சுமார் 96 ஆண்டுகள் பழைமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. மத்திய விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கடந்த நவம்பர் மாதம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பணிகள் முடிவடைய தாமதம் ஆனது. தற்போது இறுதி கட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விரைவில் நாடாளுமன்ற கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது. டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனம் இந்த கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விரிவான வாகன நிறுத்த பகுதி உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி நாடாளுமன்ற கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பிரதமர் மோடியுடன் சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடனும் பிரதமர் மோடி உரையாடினார். புதிய நாடாளுமன்றத்தின் பிரம்மாண்ட ஹால்களில் நின்றபடி அங்கு நடக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இந்த புதிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம், இந்தியா ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் உள்ளிட்டவற்றையும் கட்டப்படுகின்றன.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய கடமைப்பாதையும் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாதை, இந்தியில் ‘ராஜ பாதை’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இதை கடமை பாதை என மத்திய அரசு மாற்றியது.