5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.என்.நேரு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கடந்த ஆண்டில் 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், பெருந்துறை, அவினாசி, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்தவண்ணம் உள்ளன. இந்த நகராட்சிகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் மாநகராட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை வருகிறது. எனவே, நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த ஆய்ந்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் ஊராட்சி உள்ளாட்சிகள் அமைப்பு பதவி டிசம்பர் 2024ல் நிறைவடைவதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என ஊரக வளர்ச்சித்துறை, அமைச்சர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் உத்தரவை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும். சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க ரூ.600 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன எனவும் தெரிவித்தார். மேலும், சென்னை மாநகரில் முந்தைய அரசால் 830 எம்.எல்.டி குடிநீர் அளவு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 30 எம்.எல்.டியாக உயர்த்தி வழங்கப்படுகிறது. நெம்மேலிக்கு அருகில் உள்ள பேரூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அம்மா உணவகங்களுக்கு திமுக அரசு உரிய நிதியை ஒதுக்கவில்லை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு இந்த ஆண்டு 129 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் 15 கோடி தான் வருகிறது எனப் பதில் அளித்தார்.