தெற்கு ஆசிய நாடான மாலத்தீவுக்கு, இன்று செல்லும் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு, விரைவு ரோந்து கப்பல் மற்றும் சிறிய ரக படகு ஆகியவற்றை பரிசாக அளிக்க உள்ளார்.
இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று முதல் 3ம் தேதி வரை, மாலத்தீவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, அந்நாட்டு ராணுவ அமைச்சர் மரியா அகமது திதி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோருடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து, அவர் பேச்சு நடத்தவுள்ளார். மேலும், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.
நட்பு நாடுகளின் திறனை வளர்ப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் சிறிய ரக படகு ஆகியவற்றை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிசாக அளிக்க உள்ளார். மாலத்தீவில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளைப் பார்வையிடும் அவர், புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாட உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.