டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு முக ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) தலைவராக உள்ளார். இவர் வீராங்கணைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை மற்றும் பதிவியில் இருந்து நீக்க கூறியும் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் இந்தியாவிற்காக பதக்கங்களை குவித்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அது தோல்வியில் முடிந்தது. அதையடுத்து பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் குழு அமைத்தது.
கமிட்டி அமைத்து பல நாட்களாகியும் சர்ச்சைகுரிய நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதையடுத்து மீண்டும் போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு வார காலமாக டெல்லி ஜந்தர் மந்தரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருவது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டுக்காக பதக்கங்களை குவித்த வீரர்கள், தற்போது நீதிக்காக தெருவில் இறங்கி போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அங்கேயே தங்கி டெண்ட் அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களை கலைக்க இரவில் மின்சாரத்தை நிறுத்துவது, குடிநீரை நிறுத்துவது உள்ளிட்டவைகளை ஒன்றிய அரசு செய்தது. ஆனால் வீரர்கள் கலையாமல், அங்கேயே மல்யுத்த பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர், முக்கிய அரசியல் அமைப்புகள் வீரர்களை சந்தித்து தங்களது ஆதரவுகளை வழங்கினர்.
இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!’’ என தெரிவித்துள்ளார்.