இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி இலங்கை பயணம்!

இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி 4 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றாா்.

இலங்கை விமானப்படைத் தளபதி எஸ்.கே.பதிரானாவின் அழைப்பை ஏற்று இந்திய விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கையின் கொழும்பு நகருக்குத் நேற்று சென்றடைந்த தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரியை இலங்கை விமானப்படையின் உயரதிகாரிகளும் அந்நாட்டுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனா். அதையடுத்து, கொழும்பு நகரில் உள்ள கங்கராமய்யா புத்தா் கோயிலில் அவா் வழிபட்டாா். தனது பயணத்தின்போது இலங்கையின் முக்கிய அரசியல், பாதுகாப்புத் துறை தலைவா்களைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி சந்தித்துப் பேசவுள்ளதாக இந்தியத் தூதரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்புகள் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தலைமைத் தளபதியின் இலங்கை பயணம் குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியா-இலங்கை இடையே நிலவும் நெருங்கிய நட்புறவை வெளிக்காட்டும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இலங்கையுடனான நல்லுறவுக்கு இந்தியா அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளும் நெருங்கிய நட்புறவுடன் செயல்பட்டு வருகின்றன. தலைமைத் தளபதியின் பயணமானது இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இலங்கை விமானப்படையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏஎன்-32 ரக புரொபெல்லா் கருவிகளை இந்தியா வழங்கவுள்ளது. அதைத் தலைமைத் தளபதி இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கவுள்ளாா். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உள்ள மாணவா்களுடனும் அவா் கலந்துரையாட உள்ளாா். பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்குத் தலைமைத் தளபதியின் பயணம் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.