ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பேசிய கெஜ்ரிவால், ‘காங்கிரஸுக்கு வாக்களிப்பவா்கள் நாட்டிற்கு துரோகம் இழைப்பவா்களாவா், பாஜகவுக்கு வாக்களிப்பவா்களை கடவுள்கூட மன்னிக்க மாட்டாா்’ என்று கூறினாா். இதையடுத்து, கெஜ்ரிவால் மீது இரு பிரிவினருக்கு இடையே பகையை தூண்டும் பிரிவுகளின் கீழ் உத்தர பிரதேச போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சுல்தான்பூா் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னோ கிளை நிராகரித்தது.
இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், ‘தோ்தல் விதிமீறலில் கெஜ்ரிவால் ஈடுபட்டதாக தாக்கலான புகாா் மீது உத்தர பிரதேச போலீஸாா் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எந்தவித விசாரணையுமின்றி 2 நாள்களுக்கு பிறகு உத்தர பிரதேச போலீஸாா் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதன் மூலம், போலீஸாா் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளது தெளிவாகிறது. கடவுகளை குறிப்பிட்டதால் மட்டும் பல்வேறு தரப்பினருக்கு இடையே பகையை தூண்டுவதாகாது. பிரசாரத்தில் கெஜ்ரிவால் எந்தவித மதத்தையும் குறிப்பிடவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று திங்கள்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. இந்த மனு மீது பதிலளிக்க உத்தர பிரதேச அரசு அவகாசம் கோரியதையடுத்து, ஜூலை 3-ஆம் வாரத்துக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்து, அதுவரை இந்த வழக்கு மீதான இடைக்கால தடை தொடரும் என்று உத்தரவிட்டனா்.