டெல்லியில் நீதி கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா இன்று சந்தித்து பேசினார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங். இவருக்கு வயது 66. பிரிஜ் பூஷண் மற்றும் மல்யுத்த பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தருகின்றனர் என்பது புகார். ஆகையால் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்திலும் குதித்தனர் மல்யுத்த வீராங்கனைகள். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் ஒரு விசாரணை குழுவையும் கூட மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் ஒதுங்கி இருக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. தம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரிஜ் பூஷண் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இதனிடையே மேரிகோம் கமிட்டி தமது அறிக்கையை மத்திய அரசிடமும் அளித்தது. ஆனால் இந்த அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவும் இல்லை. இது மல்யுத்த வீராங்கனைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனிடையே 7 மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் சில நாட்களுக்கு முன் விசாரித்தது. மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். அப்போதை விசாரணையில், மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்திருக்கும் புகார்கள் மிக தீவிரமானவை- விசாரிக்கப்பட வேண்டியவை. மல்யுத்த வீராங்கனைகளின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறோம் என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட்.அத்துடன் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் உச்சநீதிமன்றம் காட்டிய கடுமையால் பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும் பிரிஜ் பூஷண் பதவி விலக மறுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்திய ஒலிம்பிக் சிங தலைவர் பிடி உஷா, போராடும் மல்யுத்த வீராங்கனைகளை இழிவாக விமர்சித்திருந்தார். இதுவும் மிகப் பெரும் சர்ச்சையானது ஒரு எம்பி பதவிக்காக பிடி உஷா இப்படி பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை பிடி உஷா இன்று சந்தித்து பேசினார்.