பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை: காங்கிரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் மே மாதம் 13ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நேற்று கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ2,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3,000ம், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு பாஜக, பஜ்ரங் தளம் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிலர் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தான் பஜ்ரங்தள அமைப்பு தடை செய்யப்படும் எனும் காங்கிரஸ் கட்சியின் அறிவிப்புக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும், கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:-

இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய பல்வேறு காரணங்கள் உள்ளன. பயங்கரவாதம், சட்டவிரோத பணப்பரிமாற்றம், கில்லர் ஸ்குவாட், உபா மற்றும் என்ஐஏ வழக்குகள் பதிவாகி இருந்தன. இதனால் நாட்டுக்கு எதிராக உள்ளதாக கருதி மத்திய அரசு பிஎப்ஐயை தடை செய்துள்ளது. கர்நாடகாவில் பஜ்ரங்தளத்தை, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுடன் ஒப்பிடும் வகையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியை அளித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் அடிப்படை அரசியலை காங்கிரஸ் கட்சி அறியவில்லை.

பஜ்ரங்தளம் என்பது தன்னார்வ அமைப்பாகும். இது அனுமான் பக்தர்கள் மூலம் சேவை செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் செயல்படும் பஜ்ரங்தளம் என்பது தமிழ்நாடு, கேரளாவில் செயல்படும் அமைப்புகளிடம் இருந்து முற்றிலும் வேறுபாடாக உள்ளது. ஏனென்றால் இந்த அமைப்பு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. ஆனால் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்பது அப்படியில்லை. அது ஒரே அமைப்பாகும். அந்த அமைப்பு மக்களை பாதிப்படைய செய்கிறது. தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் வகையில் இருந்தது. இப்போது 20 சீட்டுக்குள்ளே மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.