இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, அந்நாட்டின் அதிபர், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி 4 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கள்கிழமை இலங்கை வந்தார். அப்போது அவர் ஒன்றிய அரசு சார்பில் ஏஎன்-32 ரக போர் விமானத்துக்கான உந்துவிசை கருவிகளை இலங்கைக்கு வழங்கினார். பின்னர் அவர் நேற்று முன்தினம் இலங்கை விமானப்படை தளபதி சுதர்ஷன பத்திரணவை சந்தித்து கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், அவர் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நேற்று சந்தித்தார். இது குறித்து இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில், “இலங்கை பயணத்தின் ஒருபகுதியாக, விமானப்படை தளபதி சவுத்ரி அதிபர், பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் விமானம் மற்றும் கப்பல் படையின் உயரதிகாரிகளை சந்தித்து கலந்து ஆலோசித்தார்.இதன் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி அளிக்கப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது.