அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்கு சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால் வேறு ஆள் இல்லையா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அமலாக்கத்துறை இயக்குனராக உள்ள சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார். அவர் கூறுகையில்,’ பணமோசடி தொடர்பான வழக்குகளில் சட்டப்பிரிவுகள் அனைத்தும் மாற்றப்பட உள்ளன. எனவே அவர் பதவியில் இருப்பது அவசியம்’ என்றார்.
அப்போது,’ அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கப்படக்கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும் அவருக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது எப்படி?. அமலாக்கத்துறையில் அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு ஆள் இல்லையா? அந்த துறையில் சஞ்சய் குமார் மிஸ்ரா மட்டும் தான் இவ்வளவு இன்றியமையாதவராக இருக்க முடியுமா?. உங்கள் கூற்றுப்படி அமலாக்கத்துறையில் திறமையான வேறு யாரும் இல்லையா? இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பிறகு அமலாக்கத்துறையில் என்ன நடக்கும்?’ இவ்வாறு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி விசாரணையை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.