பிரதமர் மோடி 40% கமிஷன் கொள்ளையை கண்டுகொள்ளாதது ஏன்?: பிரியங்கா காந்தி

எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த பிரதமர் மோடி கர்நாடகாவில் பாஜ ஆட்சியினர் 40 சதவீத கமிஷன் கொள்ளை அடித்து வந்ததை கண்டுகொள்ளாதது ஏன் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி நடக்கும் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி நேற்று விஜயபுரா மாவட்டம் இண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

வளர்ச்சிகளின் நாயகன் பிரதமர் மோடி, நாடு வளர்ச்சி கண்டது போன்று கர்நாடகாவை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு என்று பேசிவருகிறார். இந்த உலகமே பிரதமர் மோடியை, எங்கும் நிறைந்தவர், எல்லாம் தெரிந்தவர் என்றும் எல்லோரையும் விட உயர்ந்தவர், வளர்ச்சி நாயகன் என்று பாராட்டுவதாக பாஜவினர் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். பிரதமரும் கர்நாடக மாநிலத்தை நாட்டின் மற்ற மாநிலங்களை போன்று முன்மாதிரிய மாநிலமாக மாற்ற கனவு காண்பதாக பிரசாரம் செய்கிறார்.

எல்லாம் தெரிந்த உங்களுக்கு கர்நாடக பாஜ ஆட்சியில் 40 சதவீத கமிஷன் கொள்ளையை ஏன் தடுக்கமுடியவில்லை. அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் கர்நாடக வளர்ச்சி கனவில் கண்மூடி இருந்திருப்பீர்கள். அதனால் 40 சதவீத கமிஷன் கொள்ளை உங்களுக்கு தெரியவில்லை போலும் . நீங்கள் பெரிய கனவு காண்பதால், சிறிய கொள்ளைகள் நடக்க அனுமதித்துவிடுகிறீர்கள். யாரையும் உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒப்பந்ததாரர்கள் சங்கம் எல்லாம் தெரிந்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறது. ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இதுவரையில் இல்லை. இதே போல் விவசாயிகள் தற்கொலைக்கும் அவரிடம் பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.