மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ள தகவல்!

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. ஏராளமான வீடுகள், கடைகள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் கலவரம் பற்றியதால் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான ராணுவத்தினரும் ஆயுதம் ஏந்திய மத்திய படையினரும் குவிக்கப்பட்டனர். கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இணைதள சேவை முடக்கப்பட்டு போக்கு வரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபடுபவர்ககளை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் இந்த கலவரத்தில் மாநிலம் முழுவதும் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் குண்டுக்காயங்களுடன் ரிம்ஸ் மற்றும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முதல் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. இம்பால் உட்பட சில மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் இயங்க தொடங்கியுள்ளன. இருப்பினும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கலவரம் நடந்த பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.