மணிப்பூரில் உள்ள தமிழர்களை மீட்க வேண்டும்: சீமான்

மணிப்பூரில் உள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என சீமான் வலியிறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை மைதி சமூகத்தினருக்கும், குகி பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் கலவரமும், உயிரிழப்புகளும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கிடையேயான மோதலை தடுக்கத்தவறி, பெருங்கலவரமாக மாறக் காரணமான மணிப்பூர் மாநில பாஜக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்கக்கோரும் மைதி சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்கக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் மாநில பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழர்கள் அதிகம் வாழும் மோரே நகரில் பழங்குடியின மாணவரமைப்பு நடத்திய ஒருங்கிணைப்புப் பேரணியின்போது நடைபெற்ற கலவரத்தில் சிக்கி, அங்கு வாழும் தமிழ் மக்கள் பேரிழப்பைச் சந்தித்து தவித்து வருகின்றனர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டும், உடமைகளுக்குத் தீ வைக்கப்பட்டும் உயிராபத்தானச் சூழலில் தமிழ் மக்கள் சிக்கித்தவிப்பது சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மணிப்பூர் மாநில அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் எவ்வித முயற்சியும் எடுக்காமல் அமைதி காப்பது மிகுந்த மனவேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதற்கே, பிகார் மாநில அரசு உடனடியாக ஆய்வுக்குழுவினை அனுப்பி அம்மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த நிலையில், தமிழர்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு நிற்கதியாய் நிற்கும் நிலையிலும் அவர்களைக் காக்க துளியளவு முயற்சியும் எடுக்காத திராவிட மாடல் அரசின் அலட்சியப்போக்கு தமிழர்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகிறது.

உலகில் தமிழினம் எங்கு அடிபட்டாலும் அவர்களைக் காக்கவும், அவர்களுக்கான நீதியைக் கோரவும் தமிழருக்கென்று ஓர் அரசு இல்லை என்பது வரலாற்றுப் பெருந்துயரமாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்புற்று மணிப்பூர் கலவரத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர உடனடியாக மீட்புக்குழுவினை அனுப்ப வேண்டுமெனவும், அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.