தி கேரளா ஸ்டோரி தடை செய்ய வேண்டும் என திருமுருகன் காந்தி தலைமையிலான தமிழ் தேசிய அமைப்பான மே 17 இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இது குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியுள்ளதாவது:-
கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற ஒரு பொய்யை கட்டமைக்கும் வகையில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ‘தி கேரளா ஸ்டோரி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகின்றனர். மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கும் இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்க தமிழ்நாட்டின் திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்துத்துவ பயங்கரவாதிகளின் பிரச்சாரத்திற்கு துணைபோகும் திமுக அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய ஒன்றிய ஆட்சியை இந்துத்துவ மோடி அரசு கைப்பற்றியதிலிருந்து இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களை இனப்படுகொலை நோக்கி தள்ளும் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலை ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக சிறுபான்மையின இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இந்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது போன்ற மாயையை கட்டமைக்கும் திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். அத்தகைய ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற திரைப்படங்கள் வரிசையில் தற்போது வந்துள்ளது தான், கேரளா இஸ்லாமியர்களை மையப்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்களை கருத்துரிமை என்ற அடிப்படையில் திரையிட அனுமதிப்பது என்பது, பாசிச பயங்கரவாதத்தையும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரையும் ஒரே தராசில் வைத்து எடை போடும் செயலாகும். இப்படியான இஸ்லாமிய விரோத-இந்துத்துவ பயங்கரவாத பிரச்சாரத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட திமுக அரசு அனுமதித்திருப்பது மிக மோசமான செயலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கை காரணமாக காட்டும் காவல்துறை, திரைப்படம் திரையிட தடைவிதிப்பது தானே முறையாக இருக்கும்! 2002 குஜராத் இனப்படுகொலையை அப்போதை முதலமைச்சர் மோடி நிகழ்த்தியதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பிபிசி ஆவணப்படத்தை, இதே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தானே இந்த அரசு ஒளிபரப்ப தடை செய்தது. மே பதினேழு இயக்கம் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி கேட்டபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும் என்று அனுமதி மறுத்தது இதே காவல்துறை.
இந்துத்துவ பயங்கரவாதிகளின் இனப்படுகொலை குற்றத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் பிபிசி ஆவணப்படத்தை தடை செய்வதும், ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் இந்துத்துவ பயங்கராவத பிரச்சாரப் படங்களை திரையிடவும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கிறது என்றால், ஆளும் திமுக அரசு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுகிறது. அனைத்து நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கும் திமுக அரசு, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுக்கிறது என்றால், இந்த திமுக அரசு ஆர்எஸ்எஸ் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்றே கூறலாம்.
இந்துத்துவ பயங்கரவாதிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிப்பதும் அதற்கு பாதுகாப்பு வழங்குவதும் ஒரு ‘திராவிட மாடல்’ செய்யக்கூடிய செயலல்ல. திராவிட கொள்கைக்கு எதிரான இந்த அரசினை வெறும் ‘திமுக மாடல்’ அரசு என்று வேண்டுமானால் கூறலாம்.
சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது. இத்தகைய அதிகாரத்தை கொண்டிருந்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடிய இந்துத்துவ பயங்கரவாத பிரச்சார படத்திற்கு அரசு பாதுகாப்பு வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதனை இன்று அனுமதித்தால், நாளை தமிழர்களுக்கு எதிரான ஒரு திரைப்படத்தை பாதுகாப்புடன் திரையிட கோரி இந்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் வந்து நிற்கும். கருத்துரிமை போர்வையில் வரும் பாசிச பயங்கரவாதத்தை தமிழ்நாட்டிற்குள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்த திரைப்படம் அரசின் பாதுகாப்புடன் வெளியாவது, இந்த போக்கை மாற்றிவிடும். இது அப்பட்டமான இஸ்லாமியர் விரோத செயலாகும். ‘இஸ்லாமியர்களின் பாதுகாவலன் திமுக’ என்ற நற்பெயரும் இதனுடன் முடிவுக்கு வந்துவிடும். ஆகவே, திமுக அரசு உடனடியாக பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதி மறுக்க வேண்டும். ஒரு தவறான முன்னுதாரணத்தை திமுக அரசு உருவாக்கிட வேண்டாம் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எதிர்க்கப்பட வேண்டியது. தமிழ்நாட்டில் இந்துத்துவ பயங்கரவாதம் நுழைவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு எதிராக ஜனநாயக முற்போக்குவாதிகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும். திரைப்பட, இலக்கிய வட்ட நாயகர்கள் இந்த திரைப்படத்திற்கு எதிராக வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.