கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பிற மதங்களை சேர்ந்த 32 ஆயிரம் கேரள பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக அடிப்படை ஆதாரங்கள் இன்றி இந்த படம் எடுக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த திரைப்படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் தடைகோரிய வழக்குகளை மீறி நேற்று தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இப்படம் போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது. இதனை கண்டித்து எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் அவர், “தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆதரிப்பது, அவர் அப்படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ என்று எண்ண வைக்கிறது. இப்படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனே இதற்கு தடை விதிக்க வேண்டுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.