இனமோதல்களால் 54 பேரை பலி கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் சமவெளி, மலைப்பகுதி இனக்குழுக்களிடையே பன்னெடுங்காலமாக பிரிவினை இருந்து வருகிறது. சமவெளி மைத்தேயி இன குழுவினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இது பழங்குடிகளான நாகா, குக்கி இன மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மைத்தேயி இன மக்களை பழங்குடி இனக் குழுவில் சேர்த்தால் அவர்கள் மூலமாக தங்களது உரிமைகள் காவு வாங்கப்படும் என்பது நாகா, குக்கி இனமக்களின் அச்சம். இதனால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் மைத்தேயி இன மக்களை குறிவைத்து நாகா, குக்கி இனமக்கள் தாக்குதல் நடத்தினர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த மோதல்களைத் தடுக்க கண்டதும் சுட ஆளுநர் அனுமதி வழங்கினார். இதனால் போலீசார், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதல்களில் இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. மணிப்பூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வாழும் மோரே நகரமும் இந்த வன்முறைக்கு தப்பவில்லை. மைத்தேயி இனக்குழுவினர் வீடுகளுக்கு இருந்தே தமிழர் வீடுகள், வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.