எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆளுநர் வேண்டாம் என்றால், உங்கள் எண்ணத்தில் நிலையற்ற தன்மை இருக்கிறது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறுகின்றனர். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆளுநர் வேண்டாம் என்றால், உங்கள் எண்ணத்தில் நிலையற்ற தன்மை இருக்கிறது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஆளுநரின் கருத்துகளுக்கு நீங்கள் எதிர் கருத்து கூறலாம். ஆனால் ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என எப்படி சொல்ல முடியும்.
2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து திமுக பேசி வருகிறது. ஆனால், இந்த அரசு அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தாமல் அவற்றை திரும்ப பெற்ற அரசாகத்தான் திமுகவை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.