மதுரை கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் மட்டுமே இடம் பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர், நாட்டிலேயே மொழி வெறியை அமல்படுத்தும் ஒரு சித்தாந்தம் தமிழகத்தில் தான் இருக்கிறது. வேறு எந்த மொழியும் தமிழகத்தில் நுழைய கூடாது என்பது தான் அது. தமிழக பட்ஜெட்டில், மதுரையில் அமைக்கப்படும் கலைஞர் நூலகத்தில் வைக்கப்படும் 3.25 லட்சம் புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேறு மொழி புத்தகங்கள் எதுவும் அங்கு இருக்காது என்று சொல்வது பிரிவினை வாதம் தானே என்று கூறி இருந்தார். கவர்னரின் இந்த கருத்துக்கு, அமைச்சர் எ.வ.வேலு நேற்று பதிலடி தந்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் பணி இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது. இந்த பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் நூலகம், முதல்-அமைச்சரின் கனவு திட்டம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், கலைஞரின் திருப்பெயரால் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் விரைவில் திறந்து வைப்பார். நூலகத்தில் நாற்காலிகள் மற்றும் புத்தகங்கள் அடுக்கும் பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது. வருகிற 12-ந் தேதி நூலகத்தில் உள்ள தமிழ் பிரிவில் புத்தகங்கள் அடுக்கும் பணி தொடங்கும். கட்டிட பணிகள் 15-ந் தேதி முடிவடைந்து விடும். வருகிற 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் மட்டுமே இடம் பெறுவது பிரிவினைவாதம் என்று கவர்னர் சொல்லி இருப்பது தமிழகத்திற்கு எதிரானது. ஒரு அரசு செம்மையாக நடைபெற வேண்டும் என்றால் அதற்கு கவர்னர் உந்து சக்தியாக இருக்க வேண்டும். அல்லது உதவும் மனம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று தான் மாநில அரசாங்கம் கருதும். ஆனால் கவர்னர், போகிற போக்கில் சில கருத்துகளை கூறி வருகிறார். அதனை எல்லாம் நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
தமிழகத்திற்கு என்று சில கொள்கைகள் உண்டு. அண்ணா ஆட்சி காலத்தில் இருந்தே தமிழகத்தில் இருமொழி கொள்கைதான். தமிழகத்தில் தாய் மொழியான தமிழுக்கு முதலிடம். இணைப்பு மொழியான ஆங்கிலத்திற்கு 2-வது இடம். இருமொழி கொள்கையின் அடிப்படையில், திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும் தமிழகத்தில் கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கிலம் புத்தகம் மட்டுமே இடம்பெறும். இருமொழி கொள்கை மட்டுமே தமிழகத்தில் கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.