3ம் ஆண்டில் நுழையும் திமுக அரசுக்கு விசிக எப்போதும் துணை நிற்கும்: திருமாவளவன்

3ம் ஆண்டில் நுழையும் திமுக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆட்சி நிர்வாகத்தால் ஏழை – எளியோருக்கு மகிழ்ச்சி! கொள்கை அடிப்படையிலான இனப்பகையோருக்கு மிரட்சி! பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம் போன்ற நலத்திட்டங்களைப் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளைப் படைத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் நல்லாதரவோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ‘திராவிட முன்மாதிரி’ ஆட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா முழுவதும் இந்த திராவிட முன்மாதிரி ஆட்சி நிர்வாகம் பரவ வேண்டும் என வாழ்த்துகிறோம்.

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் காலத்தில் சொன்னவற்றை மட்டுமின்றி, சொல்லாத பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். உலகின் வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் கடன் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி குறைக்கப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியை ஒதுக்கும் பொருளாதார உறுதிநிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

பல நாடுகளில் இருந்தும் முதலீடுகளை ஈர்ப்பதன் காரணமாக புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. வளர்ச்சியில் பின்தங்கி இருந்த மாவட்டங்களில் கூட ‘சிப்காட்’ வளாகங்கள் உருவாக்கப்பட்டு இலட்சக் கணக்கானோர் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வேளாண் தொழிலுக்கு உரிய அக்கறை காட்டப்படுவதால் உணவுப் பொருள் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டிச் சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நலிவடைந்து வந்த பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் புது வேகம் பெற்றிருக்கின்றன.

பேரிடர் காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டுத் தருவதற்கு ‘இல்லம் தேடிக் கல்வி’ , ‘எண்ணும் எழுத்தும்’, ‘காலை சிற்றுண்டித் திட்டம்’ முதலான திட்டங்கள் பேருதவியாக விளங்குகின்றன. இதனால் பள்ளி மாணவர்களிடையே இடை நிற்றல் வெகுவாகக் குறைந்து இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கான புதிய மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பெண்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 29% உயர்ந்திருக்கிறது.

நல்லாட்சி என்பது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கும் என்பதற்கேற்ப தொழிலாளர்களின் குரலை மதித்து தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது. நலத்திட்டங்களையும், நல்ல நிர்வாகத்தையும் வழங்குவது மட்டுமின்றி தற்போது இந்திய நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சனாதன சமூகப் பிரிவினைவாதத்துக்கு எதிராக உறுதியோடு கருத்தியல் சமர் புரிவதிலும் நமது முதலமைச்சர் முன்னணியில் நிற்கிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கும், ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற சமதர்ம நோக்கும்தான் திராவிட முன்மாதிரி ஆட்சியின் உள்ளீடு என முதலமைச்சர் கூறியிருப்பது சனாதன சக்திகளுக்கு சரியான பதிலடி ஆகும். இந்தத் திராவிட முன்மாதிரி அரசின் சாதனைகள் தொடர அனைத்து விதங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.