அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினம் ஒரு ‛திருக்குறள்’ கட்டாயம்: இறையன்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தினமும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கட்டாயம் எழுதிவைக்க வேண்டும். தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமை செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.

மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ் சொல்லுடன் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகையில் நாள்தோறும் எழுதி வைக்குமாறு அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர்களை கேட்டு கொள்ளலாம். மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர், மாவட்ட நிலை அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.