என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது!

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும், ஏற்கனவே என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் நடைபெற்றதாக தகவல் வெளியானது. மத்திய அரசு தடை விதித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையின் போது கூர்மையான ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கல்லை சேர்ந்த முகமது கைசர் மற்றும் தேனியை சேர்ந்த சாதிக் அலி ஆகிய ஐந்து பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சட்டவிரோத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, என்ஐஏ-வால் பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றம்சாட்டப்பட்ட 10 நபர்களுக்கு எதிராக என்ஐஏ, இந்தாண்டு மார்ச் 17 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. தொடர் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சதி செய்து, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான அதன் திட்டங்களை எதிர்க்கும் எதிரிகளையும், பிஎஃப்ஐ சித்தாந்தத்துடன் இணையாதவர்களையும் ஒழிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கறிஞர்கள் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.