தர்ம யுத்தம் தொடங்கியதே டி.டி.வி. தினகரனுக்கு எதிராக தான் என்று சொல்லிவிட்டு தற்போது ஓ.பன்னீர்செல்வம் அவரை சந்தித்து உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன்னிப்பே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் இன்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தீய சக்திகளோடு சேர்ந்து கொண்டு கருணாநிதிக்கு புகழ் பாடுகிறார். மகனை மு.க.ஸ்டாலினுடன் சந்திக்க வைத்து தி.மு.க. அரசை பாராட்ட வைக்கிறார். அவரது இந்த நிலைபாட்டினை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அவருக்கு மன்னிப்பே கிடையாது. சசிகலா குடும்பத்துக்கு எதிராக தான் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். தர்ம யுத்தம் தொடங்கியதே டி.டி.வி. தினகரனுக்கு எதிராக தான் என்று சொல்லிவிட்டு தற்போது அவரை சந்தித்து உள்ளார். அவர் ஒரு அமாவாசை. இவர் ஒரு அமாவாசை. 2 அமாவாசையும் ஒன்று சேர்ந்து உள்ளன. ஒரு அமா வாசையையே தாங்க முடியாது. இப்போது 2 அமாவாசைகளும் ஒன்று சேர்ந்து உள்ளனர்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலாவை ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்று அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அவரை சின்னம்மா என்று அழைத்து வருகிறார். எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வுக்குள் ஓ.பன்னீர்செல்வம் வர முடியாது. ஓ.பி.எஸ்.சுடன் உள்ள மற்ற நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஜே.சி.டி. பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிருப்தியுடன் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். டி.டி.வி. தினகரன் சொல்வதை எல்லாம் நகைச்சுவையாகத்தான் அனைவரும் எடுத்துக்கொள்வார்கள். ஓ.பி.எஸ்.-டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. சேர்த்துக் கொள்ளாது. அவர்களை பா.ஜ.க. சேர்த்துக்கொண்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.