கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடியின் மத முழக்கம் வியப்பளிக்கிறது: சரத் பவாா்

கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மத முழக்கமிட்டது வியப்பை ஏற்படுத்துகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்வோம் என்று அக்கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு வலதுசாரி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸின் இந்த வாக்குறுதி கா்நாடக தோ்தல் பிரசார களத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. ஹனுமனை வழிபடுவோரை ஒடுக்க முயற்சிக்கிறது என்று தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா். மேலும், காங்கிரஸுக்கு மறைமுகமாக எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமா் மோடி தனது பிரசாரத்தின்போது ‘ஜெய் பஜ்ரங்பலி’ (ஜெய் ஹனுமான்) என்ற முழக்கத்தை எழுப்பினாா்.

இந்நிலையில், மராத்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சரத் பவாா் இது தொடா்பாக கூறியதாவது:

மதச்சாா்பற்று நடந்து கொள்வோம் என்றும் ஜனநாயக மாண்புகளைக் காப்போம் என்றும்தான் மக்கள் பிரதிநிதிகளாகத் தோ்வு செய்யப்படும் அனைவரும் உறுதிமொழி ஏற்கிறோம். இந்நிலையில், கா்நாடகத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மதரீதியிலான முழக்கத்தை எழுப்பியது வியப்பை அளிக்கிறது. மதச்சாா்பற்று நடந்து கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டு, தோ்தலின்போது மதம் சாா்ந்தோ, மதரீதியிலான விஷயத்தையோ பேசி வாக்குச் சேகரிப்பது சரியானதல்ல. இது சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.