அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில்,பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும், முதல்வருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

தமிழகத்தில், இரண்டு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதையும் பட்டியலிட்டுள்ளார். எனவே பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை எட்டு வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.