அண்ணன் சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டு வந்தார், குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை சேகர் பாபு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்பு என மகள் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். பழைய வழக்கு ஒன்றில் சதீஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
ஒரு முக்கியமான விஷயத்தை நான் பேச வேண்டும். அண்ணன் சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டு வந்தார். முதலில் என்னிடம்தான் உதவி கேட்டு வந்தார். குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டோம். இது உங்கள் குடும்ப விஷயம், இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. உங்கள் தந்தை, பெரியவர்களை வைத்து பேசி சரி செய்யுங்கள். இல்லையென்றால் கோர்ட்டுக்கு செல்லுங்கள். நீதித்துறை சிறப்பாக உள்ளது. அதனால் கோர்ட்டில் அணுகுங்கள். அரசியல் ரீதியாக குடும்ப விஷயங்கள் பற்றி நாங்கள் பேசி அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் இப்போதும் கூட அதை பற்றி பேச நினைக்கவில்லை. ஆனால் அந்த இளைஞரை தொல்லை செய்கிறார்கள். அது ஒரு குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் இதில் போலீசை வைத்து பிரஷர் கொடுக்கிறார்கள். வாரண்ட் போட்டு தொல்லை கொடுக்கிறார்கள். அந்த பெண்ணிற்கு மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதை எல்லாம் சும்மா விடக்கூடாது. பழைய எதோ புகாரை எல்லாம் எடுத்து வந்து வழக்கு போடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு டிஜிபிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். சட்டப்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்பட கூடாது. இது குடும்ப விஷயம். இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதில் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஒரே நபர் மீது மாறி மாறி அரசு அதிகாரத்தை ஏவி விடுவீர்கள் என்றால் அது மிகப்பெரிய தவறு. இதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ய கூடாது. முதல்வர் ஸ்டாலின் இதில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
எனக்கு எதிராக திமுகவினர் பலரும் வழக்கு தொடுத்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கூட எனக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். முதல்வரை சேலஞ்ச் செய்கிறேன். நீங்களும் குற்றம் செய்துள்ளீர்கள். பிடிஆர் இதைத்தான் சொல்கிறார். அரசு துறையை பயன்படுத்தி.. பிடிஆர் டேப்பை ரிலீஸ் செய்ததற்காக நீங்கள் என் மீது மீண்டும் இன்னொரு வழக்கு போடுங்கள். பிடிஆர் டேப் 1 மணி நேரம் இருக்கிறது. நீங்கள் பிடிஆர் பைல்ஸ் பற்றி கேஸ் போடுங்கள். அது எல்லாம் கோர்ட்டில் வெளியே வரட்டும். இங்கே பிடிஆர் தவறு செய்யவில்லை. தப்பு செய்தவரை பற்றி பேசி இருக்கிறார். அதை பற்றி கோர்ட் பேச வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், எம்பி டி. ஆர். பாலு, கனிமொழி, முன்னாள் எம்பி ஆர்எஸ் பாரதி என்று வரிசையாக எனக்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளனர். அவர்கள் மாறி மாறி வழக்கு தொடுத்து உள்ளனர். பல கோர்ட்டுகளில் அவர்கள் எனக்கு எதிராக அவதூறு வழக்கு போட்டுள்ளனர். 1461 கோடி ரூபாய்க்கு என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இப்படி நடந்ததே இல்லை. இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. அவர்கள் தந்தை பாஜகவே எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள்., பாஜக இங்கொன்று அங்கொன்றும் இருப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கிண்டலாக சொன்னார். இப்போது அவர்கள் போட்டு இருக்கும் அவதூறு வழக்கு போட்டுள்ளதை பாருங்கள். பாஜக அங்கேதான் இருக்கும். இதுதான் பாஜகவின் வலிமையை காட்டுகிறது.
நீங்கள் 1461 கோடி ரூபாய்க்கு வழக்கு போடும் அளவிற்கு நாங்கள் முன்னேறி உள்ளோம் என்று காட்டுகிறது. திமுக பைல்ஸ் பார்ட் 2 ஜூலை மாதம் வரும். நீங்கள் அவதூறு வழக்கு போடுவதால் நாங்கள் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இந்த முறை புதிய அமைச்சர்கள் மீது புகார்கள் வைக்கப்படும். விரைவில் பார்ட் 2 வரப்போகிறது. அப்போது பல உண்மைகள் வரும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.